எதிர்பாராத விதமாக உங்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், மனம் உடைந்து போனீர்களோ? உங்களைப் போன்ற அநேக மக்கள் இந்த உலகில் உண்டு என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? ஆம். நீங்கள் மட்டும் தனிமையில் இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் உங்களைப்போல் ஓடினவர்கள் தானே. இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தானே. இந்த பக்கவாதம் வரும் வரை, தங்கள் வாழ்வில் இயல்பாக பல காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அனால் திடீரென்று ஒரு நாள் இந்த நோய் அவர்களையும் தாக்கியது. வழக்கமாக செய்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. தினமும் ஓடிய ஓட்டம் முடியவில்லை. ஆம், உங்களைப் போலவே அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் கடினமான ஒரு காரியம் தான். மனதில் ஒரு வெறுப்பும் விரக்தியும் வரலாம். மனதில் பல கேள்விகள் வரலாம். பொறுமையுடன், இந்த கட்டுரையை வாசிங்கள். உங்கள் மனதில் உள்ள பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
பக்கவாதம் வந்தவருக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குணமடைய முடியும். இது மருத்துவ ரீதியில் உண்மையாக நிரூபிக்கப்பட்டது.
உங்களுடைய உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ, அதே முக்கியத்துவம் மன நலத்திற்கும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையன்றால், மன நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பக்கவாதம் வந்த பின், சிலருக்கு வாழ்கையில் பிடித்தம் இல்லாமல் போகிறது. ஏன் எனக்கு இப்படி ஆயிற்று என கேள்விகள் எழுகிறது. மனம் சோர்ந்து போய்விடுகிறார்கள். இப்படிபட்டவர்களுக்கு வாழ்க்கையின் தரம் குறைந்துவிடுகிறது. மேலும், மருத்துவர் சந்திப்பு, மாத்திரைகள் எடுத்தல், இரத்த பரிசோதனை, உடற்பயிற்சி செய்தல் போன்ற இன்றியமையாததைச் செய்ய மறுத்துவிடுவார்கள். இதனால், மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு மாற கடினப்படும். இந்த நிலைமையை தான் ‘பக்கவாதத்துக்குப் பின் வரும் மனக் கவலை நோய்’ (Post Stroke Depression) என்று அழைக்கிறோம்.
இந்த ‘மனக் கவலை நோய்’, பக்கவாதம் வந்து பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் கழித்து கூட வரலாம். இதற்கான அறிகுறிகள் என்ன?
நிரந்தரமான கவலை
சோகம்
‘எதையோ பறிகொடுத்தது போல’ ஒரு நிலை
தூக்கமின்மை
அதிக பசி அல்லது பசியின்மை
நம்பிக்கையற்ற நிலை
உதவியற்ற நிலை
தன்னம்பிக்கையற்ற நிலை
சமுதாயத்தை விட்டு விலகுவது
எந்தவிதமான பொழுதுபோக்கும் சந்தோசம் தருவதில்லை
முறுமுறுப்பு
அடிக்கடி கோபப்டுதல்
உடல் சோர்வு
தொடர்ந்து கவனச்சிதைவு
உடல் வலி, தலை வலி
ஜீரணக் கோளாறு
தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் அல்லது தற்கொலை எண்ணங்கள்.
இப்படிப்பட்டவர்கள் உடனயாக மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் மருந்துகளும் பெறும்போது, அதி விரைவில் குணமடைய வாய்ப்புகள் அதிகம். நன்றி.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:
டாக்டர் ஜெ. ஜெஷூர் குமார் MBBS, MD, MRCPsych (UK), CCT (UK)
திருநெல்வேலி
தொலைபேசி எண்: +91- 8300 123 131