ELDERS - 65+

மறதி நோய் (DEMENTIA)

நாம் எல்லோரும் சில நேரங்களில் பொருட்களை (key, mobile etc.) எங்கு வைத்தோம் என்று தேடுகிறோம். சில நபர்களின் பெயர்களை மறக்கிறோம். வீட்டு மாடிக்கு சென்று விட்டபின், எதற்காக இங்கு வந்தோம் என யோசிக்கிறோம். எனக்கு ஞாபக மறதி அதிகம் என நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். இவை அனைத்தும் இயற்கையாகவே இறைவன் கொடுத்த ஞாபக மறதி. யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் நடந்த, பேசிய எல்லாக் காரியங்களும் ஒரு மனிதருக்கு ஞாபகத்தில் இருந்தால் அவனது நிலை என்ன ஆகும்! ஆகையால் ஞாபக மறதி என்பது அவசியமான ஒன்றாகும்.

வயது செல்லச் செல்ல, ஞாபக சக்தி சற்று குறைந்தே காணப்படும். இதுவும் இயல்பான ஒன்றாகும். இதனை Senile Forgetfulness என்று குறிப்பிடலாம்.

இப்போது, ஞாபக மறதி நோயைப் பற்றி பார்ப்போம். பொதுவாக, இது முதியோர்கள் மத்தியில் காணப்படும் ஒரு நோயாக அமைகிறது. மேலும், சில வருடங்களாக மெதுவாக மோசமாகிக் கொண்டே போகக்கூடிய (Progressive deterioration) நோயாக உள்ளது. இந்த நோய் ஒரு முதிர்ந்த வயதுடைய நபருடைய மூளையைப் பாதித்து, அவருடைய ஞாபக சக்தி, சிந்திக்கும் திறன், தகவல்கள் புரியக்கூடய திறன், தான் எங்கு இருக்கிறோம் என உணரும் திறன், புதிய காரியங்களைக் கற்றுக் கொள்ளும் திறன், காலம், கணிதம், மொழித் திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் போன்றவைகளை பாதிக்கும்.

இவைகளோடு கூட, மேலும் பாதிக்கப்படக் கூடியவைகள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், சமுதாயத்துடன் சேர்ந்து வாழக்கூடிய திறன் மற்றும் என்னால் முடியும் என்கிற மனதிடன் போன்றவைகள். இந்த நோயை Alzheimer’s Dementia என்றும் அழைப்பார்கள், சில வருடங்களில், இந்த நபரால் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முடியாது. குளித்தல், ஆடை அணிதல், உணவு உட்கொள்ளுதல் போன்ற பல காரியங்களுக்கும் உதவி தேவைப்படும்.