திடீர் மன அழுத்தம் (ACUTE STRESS)

நாம் எல்லோரும் சிறு சிறு பிரச்னைகள் வரும்போது சோர்ந்து போகிறோம். கலக்கமும், திகிலும், நம்மை ஆட்கொள்கிறது. ஆகிலும், பிரச்னைகள் நீங்கும்பொழுது தெளிவு பிறக்கிறது. மீண்டும் மகிழ்ச்சி அடைகிறோம். இது சில மணி நேரங்கள் முதல் ஒரு சில நாட்கள் வரை செல்லலாம். இந்த பிரச்னைகள் ஒரு மனிதனின் உடல் நலத்தை அல்லது மன நலத்தைப் பாதிக்கும்படியாக அமையலாம். மனதளவில் இது ஒருவருடைய தற்பாதுகாப்பையோ அல்லது தான் நேசிக்கும் ஒருவரைப் பாதிக்கும்படியாகவோ அமையலாம்.

உதாரணமாக, accidents, சண்டைகள், வேலை இழப்பு, சமுதாயத்தில் தன் மதிப்பைப் பாதிக்கும்படியான ஒரு நிகழ்வு, கடன் பிரச்னைகள் போன்றவைகள். இது போன்ற திடுக்கிடும் காரியங்கள் நம் அனைவரையும் சில நாட்கள் பாதிக்கக் கூடியவைகள். பாதிப்பும் நபருக்கு நபர் வித்தியாசப்படும்.

Generally, பிரச்னையைக் கேள்விப்பட்ட உடன், ஒரு திகைப்பு, பயம், கலக்கமும் ஏற்படலாம். அதன் பின்பு தலை சுற்றுவது போல் ஒரு உணர்வு ஏற்படலாம். நாம் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற குழப்பம் ஏற்படலாம். இதற்குப் பிறகு அந்த நபர் அதிக பயம் கொண்டவராயும், நெஞ்சு படபடவென்று அடிப்பதைக் காணலாம். அதிக வியர்வை சொரியலாம். தனது உடையிலேயே உணர்வில்லாமல் சிறு நீர் கழித்து விடலாம். மற்றும் சில நபர்கள், இதற்கு எதிர்மாறாக, வெறி கொண்டவர்போல, அங்கும் இங்கும் ஒடவும் மிகச் சத்தமாகக் கூச்சல் போடவும் செய்யலாம். பொதுவாக இப்படிப்பட்ட வித்தியாசமான மணிக்கு மணி மாறும் உணர்வுகள் அனைத்தும் 1-3 நாட்களுக்குள் மறைந்துவிடும்.

மனக்கவலை நோய் : (DEPRESSION)

நாம் திடீர் மன அழுத்தம் பற்றி பார்த்தோம். இந்த மன அழுத்தம் சில நாட்களில் குணமாகவில்லையென்றாலோ அல்லது பிரச்னைகள் (Stressors) அதிக காலம் நீடித்தாலோ, மன அழுத்தம், மனக்கவலை நோயாக மாறிவிட வாய்ப்புகள் இருக்கின்றன. மனக்கவலை என்பது நாம் எல்லோரும் அன்றாடம் அனுபவிப்பது. ஆனால் மனக்கவலை என்பது மனக்கவலை நோயாக மாறிவிடக்கூடாது. இந்த மனக்கவலை நோய், நம்மிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது எப்படி? இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் பட்டியலைப் பாருங்கள்:

  • மனக்கவலை
  • உடலில் பெலன் அற்றுப்போன நிலை
  • மகிழ்ச்சியற்ற நிலை

இந்த 3 உணர்வுகளும் உங்களுக்கு உள்ளதா என்று எண்ணிப் பாருங்கள். இதை நான் சற்று விவரித்துச் சொல்லுகிறேன்.

உடல் பெலம் இல்லாதது போல் ஒரு உணர்வு ஏற்படும். கொஞ்சம் எளிதான வேலை செய்தால் கூட முழு பெலனும் முடிந்துவிட்டது (Easy fatiguability) போல் தோன்றும். சிலர் கஷ்டத்தின் மத்தியில் கூட மிகவும் கடினத்துடன் வேலை செய்வார்கள். மற்றும் சிலர் என்னால் இனி முடியாது என்று படுத்துக்கொள்வார்கள். இந்த நிலையில் இருப்பவர்களுடைய பெற்றோர்/ உறவினர்கள் அவர்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த நபர் மனக்கவலை நோயினால் பாதிக்கப்பட்டதினால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று நாம் அறிந்து அவரை மென்மையாக நடத்த வேண்டும்.

இப்பொழுது 2ம் பட்டியலையும் கவனியுங்க:

 • உறக்கம் இன்மை அல்லது அதிக உறக்கம்
 • பசியின்மை அல்லது அதிகப் பசி.
 • முழு மனதுடன் செயல்புரிய இயலாமை (Reduced attention & Concentration).
 • தன்னம்பிக்கை அற்ற நிலை (Reduced Self Esteem)
 • தற்போது உள்ள கடுமையான சூழ்நிலை மாறவே மாறாது என்கின்ற மனப்பாண்மை (ideas of Hopelessness & Helplessness).
 • தற்கொலை எண்ணங்கள் மனதில் ஓடலாம்.
 • எதிர்காலம் இருண்டுவிட்டதே, அதை மாற்றவே முடியாது என்கின்ற நினைவு அலைகள்.

மனக்கவலை மட்டும் உள்ள நபருக்கு 2ம் பட்டியலில் உள்ள ஒன்றுமே இருக்காது, ஆனால் அது நோயாக (மனக்கவலை நோய்) மாறும் பொழுது தான், 2ம் பட்டியலில் உள்ள காரியங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதை விரைவாக கண்டுபிடித்து மனநல மருத்தவரிடம் காண்பிக்க வேண்டும்.

இரவில், சிலர் படுக்கையில் படுத்து இருப்பார்கள். ஆனால் தூக்கமே வராது. இரவு முழுவதும் ‘இந்த காரியம் ஆகாது’, ‘நம்மால் முடியாது’ என நம்பிக்கையிழந்த சிந்தனைகளில் முழ்கியிருப்பார்கள். சில மணி நேரம் மட்டுமே தூக்கம் வரும், சிலருக்கு உடனே தூக்கம் வரும் ஆனாலும் காலை விடியும் முன் (சுமார் 3-4 மணிக்கு) விழித்தெழுந்துவிடுவார்கள். எழுந்தவுடன் சிந்தனை முழுவதும கவலையுடையதாகவே இருக்கும். வேறு சிலருக்கு அதிகமான தூக்கம் வரும். இரவிலும் தூக்கம். பகலிலும் தூக்கம்.

பொதுவாக, மனக்கவலை நோய் வரும்போது, பசி ஏற்படவே செய்யாது. மிகவும் குறைவாகச் சாப்பிடுவதினால், உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன. சராசரியாக 5kgs முதல் 10 kgs வரை எடை குறையலாம். இந்த எடை குறைவையும் அவர்கள் அணியும் ஆடை பெரியதாக இருப்பதையும் நீங்கள் காணலாம்.

அதே சமயம், சில நபர்களுக்குப் பசி அதிகம் ஏற்படலாம். அவர்கள் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் அதிக கவனம் செலுத்த முடியாது. ஒரு மணி நேரம் வாசிக்க வேண்டும் என்று நினைத்தால் 5 – 10 நிமிடத்துக்குள் நினைவு எங்கோ ஓடிவிடும். TVயில் பார்த்துக் கொண்டிருக்கும் கதையின் தொடர்பு புரியாது.

தன் நம்பிக்கையிழந்த ஒரு நபராக மாறிவிடுவீர்கள். நம்மால் ‘ஒரு காரியத்தை நன்றாகச் செய்யவே முடியாது’ நான் தகுதியற்றவன்; நான் ஒரு காசுக்கும் பெறாதவன்’ போன்ற எண்ணங்கள் நம் மனதில் உறைந்த பனிபோல் ஆட்கொண்டுவிடும். இந்தச் சூழ்நிலையிலிருந்து என் கஷ்டங்கள் எல்லாம் மாறவே முடியாது என்றும் இதிலிருந்து என்னைக் காப்பாறுபவர் யாரும் இல்லை என்றும் எண்ணங்கள் உதித்துவிடும். எதிர்கால நம்பிக்கையும் அற்றுவிடும்.

இப்படிப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாடி வருகின்றனர். சிலர், அழுது புலம்புவார்கள். சிலர், தன்னுடைய நம்பிக்கைக்குரிய நபரிடம் தன் துயரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள், தன் துயரைத் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொள்வார்கள். இதுதான் அதிக வேதனைக்குரிய விஷயம். இப்படிப்பட்ட மன வேதனையில் வெந்து கொண்டிருப்பவர்களே, மனக்கவலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். It is a psychiatric emergency. இவர்களுக்கு அவசர மனநல சோதனையும் மருந்துகளும் உடனடியாகத் தேவையாக உள்ளது.

மீண்டும் மனக்கவலை நோய் : (RECURRENT DEPRESSIVE DISORDER)

மனக்கவலை நோயைப் பற்றி பார்த்தோம். அது குறைந்தபட்சம் 2 வாரங்களாவது நீடிக்கும். மன நல மருத்துவரின் ஆலோசனையாலும் மருந்து மாத்திரையாலும், இது முழுமையாக சுகம் அடையும்.

மனக்கவலை நோய்க்கு மருத்துவம் செய்யாத பட்சத்தில், இந்த நோய் சுமார் 3 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் பிறகு, சுகம் அடையலாம். ஆனாலும் குறுகிய காலத்தில் மீண்டும் மனக்கவலை நோயினால் பாதிக்கப்படலாம். இந்தக் காரணத்தினால், நாமோ, அல்லது நம்மைச் சார்ந்திருக்கும் உற்றார் உறவினர்களக்கு இப்படிப்பட்ட மனக்கவலை நோய் வரும்பொழுது, உடனடியாகக் கண்டுகொண்டு மனநல மருத்துவரை அணுகவும்.

மீண்டும் நீடித்த மன சோர்வு : (DYSTHYMIA) டிஸ்தைமியா 

நீடித்த மன சோர்வு உடையவர்களுக்கு மனக் கவலை நோயைக் குறித்து கற்றுக் கொண்ட அம்சங்கள் கிடையாது. இவர்கள் பல வருடங்களாக (குறைந்த பட்சம் 2 வருடங்கள்) மனச் சோர்வு உடையவர்கள். ஒரு வருடத்தில் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே இயல்பான மன ரம்யமுடன் (Normal / Happy Mood) இருப்பவர்கள். கீழ் கண்ட பட்டியலைப் பாருங்கள் :

o   மனச் சோர்வு – 2 வருடங்களுக்கு மேலாக

o   உடல் உளைச்சல், எளிதாக பெலன் அற்றுப் போதல்

o   மகிழ்ச்சியான சம்பவத்தின் போதும் சோர்வுடன் இருத்தல்.

o   எதைக் குறித்தும் திருப்தி அடைவதில்லை.

o   தூக்கமின்மை

o   அன்றாட வேலையை எப்படியாவது முடித்து விடுதல்.

இது ஆங்கிலத்தில் டிஸ்தைமியா (Dysthymia), டிப்ரஸ்ஸிவ் நியுரோஸிஸ் (Depressive Neurosis) அல்லது நியுராட்டிக் டிபரஷ்ஷன் (Neurotic depression) என்று அழைக்கப்படும்.

இந்த மனச் சோர்வின் தன்மை மிகவும் மென்மையானது. ஆனால் இது பல வருடங்களாக நீடிக்கும். ஆகையால் இந்த வகையான சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய காரியங்களையும் சாதனைகளையும் படைப்பது மிகவும் கடினமானதாகும்.

ஃபோபியா (PHOBIA)

Phobia அல்லது மனப் பதட்டம் சாதாரணமாக எல்லாருக்கும் ஏற்படுவது தான். ஆனால் இது நோயாக (Irrespective of Person, People, Objects) மாறும் பொழுது, ஒரு பொருளையோ (Object) ஒரு நபரையோ (Person) அல்லது ஒரு இடத்தையோ (Place) பார்த்தவுடன் மட்டுமே மனப் பதட்டம் வரும். மற்ற நேரங்களில் மன அமைதலுடன் இருப்பார்கள். இதிலே உள்ள சில வகைகளைப் பார்ப்போம்.

அகோரஃபோபியா (AGORAPHOBIA) 

இந்தப் பெயர் கேட்பதற்கு  அகோரமாகவே இருக்கிறது. இது, ஒரு நபர் மூடிய அல்லது அடைக்கப்பட்ட இடம் (eg. lifts, MRI Scanner) ஒன்றிலிருந்து வெளியேற முடியாத போது ஏற்படும் பீதி / கலக்கம் ஆகும். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், உதாரணமாக busy shops, ரெயில் பயணம், விமானப் பிரயாணம், கூடப் பயத்தை ஏற்படுத்தலாம். ஆகையால் இந்த ஃபோபியா உடையவர்கள் இப்படிப்பட்ட இடங்களைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால் இங்கு மாட்டிக் கொள்ளும் போது, நம்மால் இங்கிருந்து தப்பித்துப் போக வழி இல்லையே என நினைக்கும் போது இந்த மிகுந்த படபடப்புக்குள் ஆகிறார்கள். 

சமுதாய ஃபோபியா (SOCIAL PHOBIA) 

இது பொதுவாக டீன் ஏஜ்(Teenage)ல் தொடங்கும். ஆண்களும் பெண்களும் சரி சமமாகப் பாதிக்கப்படலாம். இவர்கள் ஒரு சிறு கூட்ட மக்களைக் காணும் பொழுது (பொதுவாக தெரிந்து பழகிய மக்கள்) அவர்கள் தன்னைக் கேலி செய்வார்கள் என்று நினைத்து, அந்தக் கூட்டத்தினருடன் சேர மாட்டார்கள். அப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்லக்கூட துணிய மாட்டார்கள். சில சமயங்களில் அவர்கள் கேலி செய்யப்படும் பொழுது (criticism) அவர்களுக்கு வாந்தி அல்லது toilet செல்ல வேண்டும் என்கிற உணர்வு ஏற்படலாம். பொதுவாக இந்த பிரச்னை தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களிடம் அதிகம் காணப்படும். சில வேளைகளில் இது மிகுந்த படபடப்பில் (Panic attack) கொண்டு போய் முடியும். பல வருடங்களாக மருத்துவம் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியிலேயே வரமாட்டார்கள். (House bound).

குறிப்பிட்ட ஃபோபியா (SPECIFIC PHOBIA)

ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை (அல்லது நபரை அல்லது இடத்தை)க் கண்டவுடன் அளவுக்கு அதிகமான மன பதட்டமும் பயமும் ஏற்படுகிறது. அந்த பொருளைப் பார்க்கும் முன்னே அவருக்கு பதட்டம் ஏற்பட்டு விடுகிறது. (anticipatory anxiety) ஆகையால் அந்த நபர் இந்தப் பொருளை விட்டு ஓடி விட வேண்டும் என நினைப்பார். அந்த பொருள் இருக்கும் இடத்திற்குச் செல்ல மறுப்பார்கள்.

உதாரணமாக, பரிட்சை  ஃபோபியா (EXAM PHOBIA) எடுத்துக் கொள்வோம். எல்லா மாணவர்களுக்கும் பரிட்சை என்றால் ஒரு அலர்ஜி தான். நன்றாக படித்து தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவன் கூட ஒரு பயமுடன் காணப்படலாம். ஆனால் இது பரிட்சை ஃபோபியா அல்ல. கீழே காணப்படும் படங்களைப் பாருங்கள்.

படம்A ஒரு சராசரி மாணவனைக் குறிக்கிறது. பரிட்சைக்கு முன்(A to C), அவனது மன படபடப்பு மெதுவாக அதிகரிக்கும். பரிட்சையைக் குறித்த பயமும் கலக்கமும் ஏற்படும். படித்ததெல்லாம் மறந்து விட்டது போலத் தோன்றும். மனப் பதட்டம் உடையவர்கள் படித்த பாடங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது தவறான காரியமாகும். ஏனென்றால், மனப் பதட்டம் (anticipatory anxiety) இருக்கும் பொழுது முன்பு படித்த பாடங்களை, நினைவுக்குக் (Recollection) கொண்டு வருவது மிகக்கடினம். மேலும் அந்த மாணவன் தான் படித்தது மறந்து விட்டதே என்று நினைக்கும் போது, அவனது பதட்ட நிலை இன்னும் அதிகமாகும்.

(STM)                             ==>     (LTM)

(Short Term Memory)   ==>    (Long Term Memory)

ஒரு முறை பாடத்தை வாசிக்கும் பொழுது நமது மூளையில் அது STM (Short Time Memory) ஆக சேமிக்கப்படும். ஆனால் அது உடனடியாக அழிந்து விடும். மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தைப் படிக்கும் போது அது STMல் இருந்து LTMக்கு சென்று பதிந்து விடுகிறது. இந்த LTMல் இருக்கும் படிப்பு அழியாது. ஆனால் பதட்ட நிலையின் போது அதை நினைவிற்கு கொண்டு வருவது கடினம்.

பரிட்சை ஆரம்பித்தவுடன் LTMல் Tape recorder போலப் பதிந்து வைக்கப்பட்டுள்ள பாடங்கள் மீண்டும் நினைவுக்கு வந்து பதில் எழுதுவார்கள். அப்பொழுது, அவர்கள் என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் எழுதி முடிப்பார்கள். அதோடு அவர்களது மனப் பதட்டமும் குறைந்து விடும். (படம் Aல் D).

படம்Bஐப் பாருங்கள். இங்கே மனப் பதட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. (A to D). பரிட்சை ஆரம்பித்த பின்பும் மனப் பதட்டம் குறையவில்லை. ஆதலால், முன்பு படித்த பாடங்களும் LTMல் இருந்து நினைவிற்கு வர முடியவில்லை. படித்தது முழுவதும் வீணாய்ப் போயிற்றே என புலம்பவும் துவங்கி விடலாம். இப்படிப்பட்ட சில மாணவர்களுக்கு ‘Exam Phobia’  என்கிற தடுமாற்றம் இருக்கலாம். இவர்களை மேலும் மேலும் வற்புறுத்திப் படிக்க வைப்பது தவறு. நாளடைவில்அவர்களுக்குப்படிப்பின்மேல்வெறுப்புதான்ஏற்படும். இந்த மாணவர்கள் மன நல மருத்துவரிடம் செல்லும் போது அவருக்கு அநேக ஆலோசனைகள், பயிற்சிகள் தேவைப்பட்டால் மருந்துகளும் கொடுத்து, இதை 100% சுகமாக்கி விடலாம். 

ஹைபோமேனியா (HYPOMANIA)  

இந்த மனநிலை, மனக்கவலை நோய்க்கு நேரே எதிர்மறையான உணர்ச்சி நிலை. கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்:

  • மிஞ்சிய பூரிப்பான மனநிலை
  • அதிக உற்சாகத்துடன் கூடிய உடல் வலிமையான காரியங்கள் செய்தல்
  • அதிக விரைவுடன் மனம் செயல்படுதல்
  • அதிக உழைப்பு குறைய தூக்கம்
  • அதிக பணம் செலவழித்தல்
  • புதிய திட்டங்கள் வகுத்தல்

இந்த அம்சங்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இப்படிப்பட்ட மனநிலை எனக்கு எப்போதும் இருந்தால், நான் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறிவிடுவேன் என்றல்லவோ!

ஆனால், பாருங்களேன். இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களுக்கு, கவனக்குறைவும் தொடர்ந்து வேலை செய்யும் திறனும் (attention and concentration) மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த மனநிலை சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். அவர்கள் உடனடியாகப் பணம் செலவழிப்பதாலும் (impulsive spending), புதுப்புது திட்டங்கள் நாளுக்கு நாள் தீட்டுவதாலும், அவர்கள் பந்தய இலக்கை எட்டுவது கடினம்.


மேனியா (MANIA)

அடுத்த நிலை: கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்:

  • மிதமிஞ்சிய பூரிப்பான நிலை – சூழ்நிலைக்கு மாறாக
  • மிக அதிக உடல் தெம்பு – ஓடுதல், குதித்தல், நிற்க இயலாமை
  • மிக அதிக விரைவுடன் சம்பாஷனை – புரியாத தன்மை
  • தூக்கமின்மை
  • மிக அதிக தன்னம்பிக்கை – அளவிற்கு அதிகமான திட்டங்கள்
  • சமுதாய விதிமுறைமைகளை அவமதித்தல்
  • மிக அதிகப் பணம் நொடிப்பொழுதில் செலவழித்தல்
  • மிக அதிகக் கோபம்

இப்படிப்பட்ட மனநிலை குறைந்தபட்சம் 1 வாரமாவது நீடிக்கும். தினம் செய்யும் வேலையை செய்ய இயலாது. வாகனம் ஓட்டினால், மிக விரைவாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி சாலை விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம். ஆகையால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

குடும்ப உறவில் அதிக பிரச்னைகள் ஏற்படும் அந்த நபர் செய்யும் செயல்கள் எல்லாம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். பொதுவாக, குடும்ப உறுப்பினர்கள் அவரை கடுமையாகப் பேசி அவனை அடக்க முற்படுகிறார்கள். ஆனால் அவருக்கு உடனடியாக மனநல மருத்துவரின் பரிசோதனையும், மருந்து மாத்திரைகளும் தேவைப்படும்.


மேனியா (MANIA) + சைகோஸிஸ் (PSYCHOSIS) 

இது பூரிப்பின் இறுதிநிலை. மிதமிஞ்சிய பூரிப்பில் அம்சங்கள் பல மடங்கு அதிகமாகி காணப்படும். கீழே காணப்படும் பட்டியலைப் பாருங்கள்:

 • பூரிப்பு நிலை மாறி, கோபம் மற்றும் எரிச்சலான மனநிலை.
 • மிக அதிக உடல் தெம்பு.
 • விரைவான பேச்சு, ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு (சம்பந்தம் அல்லாத) தலைப்பிற்கு நொடிப்பொழுதில் மாறுதல் / புரியாத பேச்சு.
 • தூக்கமின்மை / சாப்பிடாமை / குளிக்காமை / தன்னைப் பேணாமல் இருத்தல்.
 • அதிக தன்னம்பிக்கையில் ‘நான் சொல்வது மாத்திரம் சரி’ என வாதாடுதல்.
 • விதிமுறைகளை அவமதிப்பதால் Police இடம் மாட்டிக் கொள்ளுதல்.
 • கட்டுப்படாத கோபத்தினால் சண்டைகள், வாக்குவாதங்கள்
 • அந்த நபருக்கு மாத்திரம் காதிலே குரல் கேட்குதல்.
 • மனித நேயத்திற்கு அப்பால்பட்ட சக்திகள் இருப்பதாக கூறி செயல்படுதல்.

இப்படி 3 வகைகளான இந்த பூரிப்பு இறுதியாக சைகோஸிஸில் முடியும். பூரிப்பு மனநிலையின் போது ஏற்படும் அநேக சீரழிவுகளைத் (உறவு பிரச்சனைகள், பணம் பறிபோதல், விதிகளை மீறுதல், சண்டைகள் போன்றவைகள்) தவிர்க்க உற்றார், உறவினர் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யும் நபரை கண்டு பிடித்த உடன் மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லவும்.

 மனபதட்ட நோய்  

சரித்திரத்தில், பயத்தினால் மரணம் அடைந்த ஒரு நபரைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் பயம் மிகவும் கொடூரத்தையும் வேதனையையும் ஒருவருடைய மனதில் உருவாக்கும் சக்தி படைத்தது. இதைப் பற்றி நாம் இங்கு காணுவோம்.

ஆபத்தை எதிர்நோக்கும் எந்த ஒரு நபருக்கும் ஏற்படும் பதட்டம் மிகவும் இயல்பானதாகும். அந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக, நமது மனமும், உடலும், இணைந்து போராடுவதற்கு ஏதுவாக இவ்விரண்டும் தயாராகுகிறது. இவ்விரண்டிலும் ஏற்படும் மாற்றங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

மனது : முதலாவது, பயம், நடுக்கம், நம்மைக் கவ்விப் பிடிக்கிறது. அதனைத் தொடர்ந்து அமைதியற்ற நிலை காணப்படும். மனது வேறு எந்த காரியத்தையும் யோசனை செய்யாமல், தனக்கு வரவிருக்கும் ஆபத்தை மட்டுமே நோக்கி இருக்கும். மனது விழித்திருக்கும். தூக்கம் வராது.

உடல் : நெஞ்சு படபடவென்று அடிக்கத் துவங்கும். அதனை நாம் நன்கு உணரலாம். வெகு விரைவாக மூச்சு விடத் துவங்குவோம். தசைகளின் இறுக்கத்தை உணரலாம். வியர்வையும் சொரியலாம். நாவு உலர்ந்துவிடும்.

பயத்தை உருவாக்கக்கூடிய சூழ்நிலை (Circumstances) அல்லது பொருள் (Stimuli) நம்மை நோக்கி வருகிறது என்று நினைத்த உடன், நம்மை அறியாமல் (Automatic Nervous System) நம் உடலில் உள்ள Auto Pilot விபத்து வரப்போகிறது என்று நமக்கு Red Signalஐ அபாய எச்சரிக்கையை உடல் மற்றும் மனதில் அனுப்பிவிடுகிறான். இது சில வினாடிகளில் செயல்படத் துவங்குகிறது. கீழே உள்ள பட்டியலின் காரியங்கள் ஆபத்தை எதிர்நோக்கும்போது உங்களுக்கு நிகழ்ந்துள்ளதா என்று பாருங்கள் :

  • நெஞ்சுவலி
  • நெஞ்சை சுற்றி மிக அழுத்தம்
  • மூச்சு திணறல்
  • நெஞ்சு படபட என அடித்தல்
  • தலை / கழுத்து வலி
  • நடுங்குதல்
  • தலை சுற்றுதல்
  • கண்பார்வை மங்குதல்
  • விரல்களில் வித்தியாசமான உணர்வு (Tingling sensation)
  • உடல் சுடுவது போலவும், குளிர்வது போலவும் உணர்வு
  • தொண்டை அடைத்தது போல் உணர்வு
  • வாந்தி வருவது போல் உணர்வு அல்லது வாந்தி எடுத்தல்
  • Toilet செல்ல வேண்டும் போல உணர்வு

மனதளவில் கீழ்கண்ட எண்ணங்கள் அவர்கள் மனதில் ஓடலாம்:

  • “எனக்கு மாரடைப்பு”
  • “அதிக நெஞ்சு வலி”
  • “நான் சாகிறேனே”
  • “என்னால் மூச்சு விட முடியவில்லை”
  • “எனக்கு மயக்கமாக வருகிறது”
  • “தலையிலே ஏதோ செய்யுது”
  • “என்ன நடக்குதென்றே தெரியவில்லை……..”                                                                                                                         பொதுவாக இப்படியாக இந்த நிலையில் இருப்பவரை அவசர சிகிச்சைக்கு (Casualty) உறவினர்கள் அழைத்துச் செல்லலாம். இதனை மக்கள் தவறாக மாரடைப்பு (Heart attack) என நினைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லாம். ஆனால் பல பரிசோதனைகளுக்குப் பின்பு மருத்துவர்கள் உறவினர்களிடம், ‘இவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ அல்லது ‘வயிறு வலி’ மாத்திரைகள் கொடுத்து அனுப்பிவிடலாம். இவ்விதம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை எடுப்பது தவறு அல்ல. ஆனால் இதேபோன்று மீண்டும் மீண்டும் மனப் பதட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் மருத்துவமனை செல்வதினால் பயன் இல்லை. மாறாக அவர்கள் மனநல மருத்துவரை அணுக வேண்டும். 
அனாரெக்ஸ்சியா (ANOREXIA)

இந்த நோயை ‘மெலிவு விரும்பும் நோய்’ அல்லது ‘ஒல்லி வெறி நோய்’ என்று கூட சொல்லலாம். இந்த நோய் ஒருவர் சாப்பிடும் முறைமை, உடல் எடை மற்றும் (மாறுபட்ட) சிந்தனை / கோட்பாடுகள் போன்றவைகளை பாதிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது. பொதுவாக, இது மேலை நாடுகளில் வசிக்கும் இளம் பெண்களையும் நாம் நாட்டில் வாழும் மேலை நாட்டின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் “Hi-fi” மக்களிடமும் காணப்படலாம். உலகில் சுமார் 3% – 5% இளம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் சுமார் 1950ம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட உலகளாவிய சமுதாய மற்றும் கலாச்சார மாற்றத்தினால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகத் துவங்கியது. மேலும் மீடியாவில் (TV, விளம்பரங்கள், சீரியல்ஸ், படம்) எடை குறைந்து மெலிந்து அழகாகக் காணப்படும் இளம் பெண்களைப் புகழ்ந்து ரசிகர்கள் கொண்டாடுவதும் ஒரு காரணமாகும். உதாரணமாக மறைந்த பிரின்ஸஸ் டயானா Bulimia என்கிற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்தநோயின்அறிகுறிகள் :

1.    பாடி-மாஸ் இன்டெக்ஸ் (Body Mass index) (BMI) 17.5க்கு கீழாக உள்ள உடல் எடை.

BMI = உடல் எடை (கி.கி.) / உயரம் (மீ)2       

BMI = Weight in kilograms / Height (m)2

(Android Phoneல் BMI appsஐ பயன்படுத்தலாம்)

2.    உடல் எடை சராசரி உடல் எடையைக் காட்டிலும் 15%  குறைந்து காணப்படுதல்.

Chart of Weight Thresholds
Height (in metres) Weight (kg) Healthy range BMI 20-25 Diagnosis of Anorexia nervosa BMI 17.5 Danger level BMI 13.5
1.50 (4′ 11″) 45.0 – 56.3 39.4 30.4
1.52 (5′ 0″) 46.2 – 57.8 40.4 31.2
1.55 (5′ 1″) 48.1 – 60.1 42.0 32.4
1.57 (5′ 2″) 49.3 – 61.6 43.1 33.3
1.60 (5′ 3″) 51.2 – 64.0 44.8 34.6
1.62 (5′ 4″) 52.5 – 65.6 46.5 35.9
1.65 (5′ 5″) 54.5 – 68.1 47.6 36.8
1.68 (5′ 6″) 56.5 – 70.6 49.4 38.1
1.70 (5′ 7″) 57.8 – 72.3 50.6 39.0
1.73 (5′ 8″) 69.9 – 74.8 52.4 40.4
1.75 (5′ 9″) 61.3 – 76.6 53.6 41.3
1.78 (5′ 10″) 63.3 – 79.2 55.5 42.8
1.80 (5′ 11″) 54.8 – 81.0 56.7 43.7
1.83 (6′ 0″) 67.0 – 83.7 58.6 45.2
1.85 (6′ 1″) 68.5 – 85.6 59.9 46.2

Reference: Oxford text book (psychiatry). 

மன சிதைவு நோய் (SCHIZOPHRENIA)

 “கல்லூரியில்படித்துக்கொண்டிருந்த 19 வயது நிரம்பிய மாணவனுடைய பழக்க வழக்கங்கள் சற்று வித்தியாசமாக இருந்தன. தன்னை ஒரு கூட்டம் கொலை செய்ய வேண்டும் என அலைகிறது எனத் தன் நண்பர்களிடம் கூறினான். சில நேரங்களில் அவன் தனியே தனக்குத் தானே சிரித்துக் கொள்வதை அவன் தாயார் கவனித்திருக்கிறார்கள். சில மாதங்களாக அவனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவனைச் சந்தித்துத் தனியாக பேசும் பொழுது அவன் தன்னோடு ஒரு குரல் பேசுவதாகவும், அது தன்னை இழிவாகக் குறைத்துப் பழி பேசுவதாகவும் கூறினான். மேலும் தனக்கு எதிரான கூட்டம் அவன் படிக்கும் கல்லூரியுடன் சேர்ந்து அவனை அழித்து விட தீர்மானித்திருக்கிறார்கள் என்றும் கூறினான்”.

இப்படிப்பட்ட மன நிலை உடையவர்களை நீங்கள் கண்டிருக்கலாம். சுமார் 100ல் ஒருவருக்கு இப்படி மன நிலைப் பாதிப்பு ஏற்படலாம். இவரது இரத்தத்தை பரி சோதனை செய்தால், அதில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் Normalஆக இருக்கலாம். இவர் பார்ப்பதற்கு எல்லாரைப் போல இருந்தாலும், இவருடைய சிந்தனை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய மனித சமுதாயம் இவர்களை எப்படி வர வேற்கிறது? நம்முடைய மனதில் இந்த மன நோய் கொண்ட மக்களை எப்படி நிறுத்துப் பார்க்கிறோம்? நாம் இவர்களுக்கு ‘பைத்தியம் பிடித்து விட்டது’ ‘Nut லூஸாகி விட்டது’ எனக் கேலி செய்து துரத்தி விடுகிறோமா? இவர்களைப் பார்த்தவுடன் நாமும் தீண்டாமை கொள்கையைப் பின் பற்றுகிறோமா? தீண்டாமையையும் அடிமைத்தனத்தையும் ஒழிக்க Nelson Mandela, மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் உலகில் இரத்தம் சிந்தி பட்ட பாடுகள் வீணாய்ப் போகின்றனவோ? நாம் சிந்தித்துச் செயல்படுவோம். மன நலம் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணியாமல் நம்மோடு ஒருவராய்ச் சேர்த்துக் கொள்ளுவோம்.

இந்த நோயைப் பற்றி சில முக்கியமான கருத்துக்களை நாம் காண்போம் :

(1)   சமுதாயத்தில் பரவலாக நிலவி வரும் கருத்து : இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் (Schizophrenia) மிகவும் கோபமடைந்து மக்களை கொல்ல வருவார்கள் என்பது.

இது மிகவும் தவறான கருத்தாகும். உண்மையிலே, இதற்கு எதிரான கருத்து தான் உண்மையாகலாம். இந்த மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கலக்கமும் பயமும் உடையவர்களாய்க் காணப்படுவார்கள். அவர்கள் தான் சமுதாயத்தைக் கண்டு பயந்து ஒளிந்து கொள்ள முற்படுவார்களே அல்லாமல், அவர்களால் சமுதாயத்திற்கு எந்தத் தீமையும் கிடையாது.

(2)   ரோட்டில் அலைந்து கொண்டிருக்கும் இந்த மன நோயால் (Schizophrenia) பாதிக்கப்பட்டவரை எப்படி அணுகலாம்?

பொதுவாக, நமது நாட்டில்இந்த நோயினால் பாதிக்கப்பட்ட வரை உடனடியாகக் கண்டு பிடித்து, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதில் மிக மிகப் பின் தங்கியுள்ளோம். ஒருவர் ரோட்டில் அலையும் அளவிற்கு அவரது நோய் முற்றியுள்ளது என்றால், அவரைச் சரியாக மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் செய்வதற்கு ஒரு உறவினரோ அல்லது ஒரு நண்பரோ இல்லை என்பதே உண்மை. வைத்தியம் செய்யாமல் சுமார் 10-15 வருடங்கள் இருக்கும் பொழுது மட்டுமே இந்த நோய் மிகவும் மோசமடைந்து தெருவில் அலையும் அளவிற்கு முற்றி விடும்.

நான் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக மேலை நாடுகளில் பணியாற்றி வருகிறேன். அங்கே மன நோய் ஆரம்பித்த (சுமார் 15 – 25 வயது) உடன் கண்டு கொள்வார்கள். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட Early Intervention Team அல்லது Assertive Outreach Team அந்த நபரை அவர் வீட்டிலேயே அடிக்கடி பார்த்து வைத்தியம் செய்து சுகமடையவைப்பர்கள். இந்த நோய் ஆரம்பித்து 1 – 2 வருடங்களுக்குள் மருத்துவம் ஆரம்பித்தால், அவரது மன நிலை மிகவும் சீக்கிரமாக குணமடைந்து இயல்பு நிலைக்கு(Normal) மிகவும் ஆச்சரியமான விதத்தில் குணமாகிவிடும். ஆனால், மருத்துவம் இல்லாமல் சுமார் 10 வருடங்கள் வைத்திருந்தால் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது சற்றுக் கடினமான காரியம். ஆகையால் நம்முடைய சேவை என்னவென்றால் இப்படிப்பட்ட நபரைக் கண்டு பிடித்து உடனடியாக மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும். நீங்களும் நம் நாட்டு மக்கள் மீது பற்று கொண்டு நம் இந்திய நாட்டை மேலை நாடுகளின் மருத்துவ வசதிக்கு இணையாக முன்னேற்ற கரம் கோர்க்க வருவீர்களா? 

மறதி நோய் (DEMENTIA) 

நாம் எல்லோரும் சில நேரங்களில் பொருட்களை (key, mobile etc.) எங்கு வைத்தோம் என்று தேடுகிறோம். சில நபர்களின் பெயர்களை மறக்கிறோம். வீட்டு மாடிக்கு சென்று விட்டபின், எதற்காக இங்கு வந்தோம் என யோசிக்கிறோம். எனக்கு ஞாபக மறதி அதிகம் என நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். இவை அனைத்தும் இயற்கையாகவே இறைவன் கொடுத்த ஞாபக மறதி. யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் நடந்த, பேசிய எல்லாக் காரியங்களும் ஒரு மனிதருக்கு ஞாபகத்தில் இருந்தால் அவனது நிலை என்ன ஆகும்! ஆகையால் ஞாபக மறதி என்பது அவசியமான ஒன்றாகும்.

வயது செல்லச் செல்ல, ஞாபக சக்தி சற்று குறைந்தே காணப்படும். இதுவும் இயல்பான ஒன்றாகும். இதனை Senile Forgetfulness என்று குறிப்பிடலாம்.

இப்போது, ஞாபக மறதி நோயைப் பற்றி பார்ப்போம். பொதுவாக, இது முதியோர்கள் மத்தியில் காணப்படும் ஒரு நோயாக அமைகிறது. மேலும், சில வருடங்களாக மெதுவாக மோசமாகிக் கொண்டே போகக்கூடிய (Progressive deterioration) நோயாக உள்ளது. இந்த நோய் ஒரு முதிர்ந்த வயதுடைய நபருடைய மூளையைப் பாதித்து, அவருடைய ஞாபக சக்தி, சிந்திக்கும் திறன், தகவல்கள் புரியக்கூடய திறன், தான் எங்கு இருக்கிறோம் என உணரும் திறன், புதிய காரியங்களைக் கற்றுக் கொள்ளும் திறன், காலம், கணிதம், மொழித் திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் போன்றவைகளை பாதிக்கும்.

இவைகளோடு கூட, மேலும் பாதிக்கப்படக் கூடியவைகள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், சமுதாயத்துடன் சேர்ந்து வாழக்கூடிய திறன் மற்றும் என்னால் முடியும் என்கிற மனதிடன் போன்றவைகள். இந்த நோயை Alzheimer’s Dementia என்றும் அழைப்பார்கள், சில வருடங்களில், இந்த நபரால் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முடியாது. குளித்தல், ஆடை அணிதல், உணவு உட்கொள்ளுதல் போன்ற பல காரியங்களுக்கும் உதவி தேவைப்படும். 

smsimonk18 – 65 Years – Healthy Mind

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *