emotions-and-feelings-

நெருங்கிய உறவினருடைய மறைவினால், ஒரு குழந்தையின் மனதில் ஏற்படும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைச் சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம், இதனை முக்கியமாக பெரியவர்கள் வாசித்துப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம், அப்பொழுதுதான், அந்தக் குழந்தையின் மன நிலையைப் புரிந்து கொண்டு நமது அரவணைப்பைக் காண்பிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 ஆழ்மன உணர்வுகளைப் பாருங்கள் :-

கட்டம் 1  அதிர்ச்சி (Shock)
கட்டம் 2  மறுப்பு (Denial)
கட்டம் 3  கோபம் (Anger)
கட்டம் 4  உரையாடல் (Bargaining)
கட்டம் 5  குற்ற உணர்வு (Guilt)
கட்டம் 6  மனக்கவலை (Depression)
கட்டம் 7  ஏற்றுக் கொள்ளுதல் (Acceptance)

கட்டம் 1 – அதிர்ச்சி :

ஒரு இள வயதினராலும் சரி, சிறு குழந்தையானாலும் சரி, தம்முடைய நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டவுடன் முதலில் நிகழும் விளைவு அதிர்ச்சிதான், அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவுடன் அந்தக் குழந்தை எப்படி நடந்துகொள்ளும் என்பது ஒருவருக்கொருவராக வித்தியாசப்படும். மேலும், அந்தக் குழந்தையின் உணர்ச்சி வெளிப்பாடுகள் பெரியவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கலாம். சில உதாரணங்களை கீழே காணலாம் :

சில குழந்தைகள் துக்க செய்தியைக் கேட்டவுடன், எதுவுமே நடக்காதது போல இருப்பார்கள். அவர்கள் எந்தவித உணர்ச்சியுமே காட்டாமல் இருக்கலாம். அதைப் பார்க்கும் பெரியவர்கள் இந்தக் குழந்தை கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கிறதே என்று கூட கோபப்படலாம். ஆனால் கோபப்படக் கூடாது.

சில குழந்தைகள் சிரிக்கலாம் / விளையாடலாம். இதனை தவறாகக் கருதக்கூடாது. ஏனென்றால் இது, குழந்தை எண்ணாமலேயே தானாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு (Reflex / Involuntary action). இந்த சிரிப்பு, ஆழ்மனதில் அதிர்ச்சியினால் தாக்கப்பட்டதின் விளைவு. இதனை மருத்துவர்கள் எவ்வாறு விளக்குகிறார்கள் என்றால் – குழந்தையின் மூளையில் மற்றும் ஆழ்மனதில், இந்த உண்மையான அதிர்ச்சியான செய்தி (Reality of Death), எந்தவித பாதிப்பை விளைவிக்காமல் இருப்பதற்காக, இயற்கையாகவே இறைவன் படைத்த ஒரு பாதுகாப்பு அம்சம் இது.

மேலும், சில குழந்தைகள், துக்க செய்தி சொன்னவரிடம் “நீங்கள் வேடிக்கைக்காகத் தானே (Joke) இதனைச் சொல்லுகிறீர்கள்” என பதிலளிப்பது பொதுவாக கேள்விப்படுகிற ஒரு விஷயம். ஆனால் அறிவுப்பூர்வமாக அந்தக் குழந்தை தன்னிடம் சொல்லப்பட்ட துக்க செய்தி உண்மைதான் என அறிந்தாலும், உணர்ச்சிப்பூர்வமாக, அந்த துக்கத்தை ஏற்றுக் கொள்வது மிக மிகக் கடினமானதாகும். சிறிது காலம் சென்ற பிறகே, அந்தக் குழந்தை துக்க செய்தியை உணர்வுப் பூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த குழந்தை அன்றன்று உள்ள வேலைகளை (Home work, பொம்மையுடன் விளையாடுதல், etc.,) செய்யத் துவங்கும். இப்படி செய்யும் வேலைகள் எதனைக் குறிக்கிறது என்றால், அந்த குழந்தை தான் கேள்விப்பட்ட சோக சம்பவத்தை மனதளவில் உணருவதற்கு தடுமாறுகிறது. அதனால்தான், தான் செய்கிற வேலையில் மிகுந்த கவனம் செலுத்தி வேதனையான எண்ணங்களை மறுக்கிறது. இந்த முதல் கட்டமான அதிர்ச்சியின் நேரம், ஒரு பாதுகாப்பான நேரம் ஆகும். இந்த நேரத்தில் இந்த குழந்தையின் மனது பண்படுத்தப்படுகிறது. ஆதலால், துக்க செய்தி கேட்ட பின் (after breaking the bad news), குழந்தையின் செயல்களைக் கண்டு பெரியவர்கள் கோபப்படவோ, பயப்படவோ, கண்டிக்கவோ கூடாது.

கட்டம் 2 : மறுப்பு (Denial)

தன் குடும்பத்தில் ஒருவர் மரித்துவிட்டார் என்பதைக் கேட்டவுடன் சிறுவயதினருக்கு ஏற்படும் மற்றொரு உணர்வுதான் மறுப்பு. சிறுவர்கள் ‘மறுப்பை’ தங்கள் மனதில் கொள்ளும்போது அவர்கள் மனது அமைதலாயிருக்கிறது. வேதனையான எண்ணங்களை மறுத்து, மரித்த உறவினர் நம்மிடம் சீக்கிரம் வந்துவிடுவார் என நினைக்கும்போது, அந்த குழந்தைக்கு எளிதாக இருக்கிறது. இந்த காரணத்தால் சில குழந்தைகள் மரித்தவர் இருந்த இடத்தை விட்டு (மருத்துவமனை, வீடு) வெளியில் வர மறுப்பார்கள். ஏனென்றால், அந்தக் குழந்தையின் மனதில், தான் வேறு இடத்திற்குச் செல்லும்போது, அந்த (மரித்த) நபர் வந்துவிட்டால், தான் பார்க்க முடியாதே என்ற ஏக்கத்தினால்தான். மறுப்பின் கூட்டத்திலிருக்கும் சிறுவர்கள், தங்களை அழகுபடுத்தி சுத்தமான ஆடைகள் அணிந்து இருப்பார்கள். ஏனெனில், அந்த நபர் (மரித்த) வரும்பொழுது தான் அவர்களை வரவேற்க வேண்டும் என்பதற்காக.

தேடுதல் :
மறுப்பில் இருப்பவர் இறந்த நபரை தேட ஆரம்பிக்கலாம். அவர் எப்பொழுது வருவார் என்று காத்து இருக்கலாம் அல்லது கட்டிலின் கீழே, கதவுகளின் பின்னே ஒளிந்து இருக்கலாம் என்று தேடலாம். தேடுவது, வயதிற்கு ஏற்றார்போல வித்தியாசப்படும். வயதில் பெரிய சிறுவர்கள், தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தெருக்களில் தேடலாம்.

மேலும் மறுப்பின் கட்டத்திலிருக்கும் குழந்தைகள் பள்ளி செல்ல மாட்டார்கள்.

இப்படியாக இந்த கட்டத்திலிருக்கும் குழந்தைகள், வேதனை சிந்தனைகள் தங்களை பாதிக்காமல் காத்து, அதே நேரத்தில் அந்த உண்மை (இறந்துவிட்ட) யை மெதுவாக தங்கள் ஆழ்மனதிற்குள்ளே ஏற்றுக் கொள்ள தயாராகிக் கொள்கிறார்கள்.

கட்டம் 3 : கோபம் (Anger)

பெரியவர்களைப் போல் சிறியவர்களுக்கும் (இறந்த நபர்) மீது கோபம் வருவது உண்மைதான். பெரும்பாலான சமயங்களில், சிறியவர் இறந்த நபர் மீது கூட வெகு கோபங்கோள்ளலாம். ஏனென்றால், இறந்த நபர், தனக்கு வேண்டிய காரியங்களையும், கடமைகளையும் (eg. பள்ளிப்படிப்பு, ஜாமான்கள் வாங்கிக் கொடுத்தல்) செய்யாமல், போய்விட்டதால் கோபப்படலாம். மேலும், சிறியவர்கள் தங்கள் கோபத்தை தாங்களே புரிந்து கொள்ள முடியாது. தங்கள் மனதின் காயங்களை மற்றவர்களுக்குச் சொல்ல முடியவில்லையே என்கிற ஆதங்கத்தினால் கூட கோபம் ஏற்படலாம்.

யார் மேல் கோபம்?
தாங்கள் ஏதோ ஒரு காரியத்தைச் செய்யவில்லை (இறந்த நபருக்கு) என்பதால் தான் மரணம் நேர்ந்துவிட்டது என்று நினைக்கலாம். தான் அந்தக் காரியத்தை நேர்த்தியாகச் செய்திருந்தால் அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்று எண்ணலாம். சில நேரங்களில், சிறியோருக்கு நர்ஸ் அல்லது மருத்துவர் அல்லது மருத்துவமனை மேல் மிக அதிக கோபம் வரலாம். இவர்களால்தான், இவர்களுடைய கவனக் குறைவால்தான், இவர் இறந்ததாக (தவறாக) புரிந்து கொண்டு கோபப்படலாம்.

எப்படி கோபம் வெளிப்படும்?
சிறு குழந்தைகள் அதிக Tantrum’s (அடாவடித்தனம்) செய்யலாம். பெரிய குழந்தைகள் மற்ற குழந்தைகளை அடித்து விடலாம். பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்ற சிறுவர்களுடன் சண்டைபோடலாம். உடைத்துப் போடலாம். Teenagers பருவப் பிள்ளைகள் குடி, புகை போன்ற பழக்கத்திற்கு அடிமையாகலாம்.

எப்படி உதவலாம்?
சிறுவர்கள் இந்த கட்டத்தில், கோபப்படுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சிறுவனிடம் அவன் உணர்ச்சிகளையும், கோபத்தைப் பற்றியும் பேச விடுங்கள். 1/2 மணி நேரம் மைதானத்தில் ஓடச் சொல்லுங்கள். அவன் கோபம் தணியும். உங்களிடம் அந்த சிறுவன் கோபப்பட்டால், நீங்கள் பதிலுக்கு கோபங்கொள்ளாமல், அவனை நீங்கள் அதிகம் நேசிக்கிறீர்கள் என்று காட்டுங்கள்.

கட்டம் 4: உரையாடல் (Bargaining)

இந்த கட்டத்தில், சிறுவர்கள் இறைவனிடம் இறந்த நபரை மீண்டும் கொடுத்தால், தான் நல்லபிள்ளையாக நடந்து கொள்ளுவேன் என்று உரையாடல் செய்வார்கள் இப்படி செய்யும்பொழுது அவர் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையால் தனது வேதனையை மறந்து சிறிது காலம் இருப்பார்கள்.

எப்படி உதவலாம்?
சிறுவர்களை நாம் Re-assure செய்ய வேண்டும். அவர்கள் நல்ல பிள்ளைகள்தான் என்பதை அவர்களுக்கு அன்புடன் புரிய வைக்க வேண்டும்.

கட்டம் 5: குற்ற உணர்வு (Guilt)

சிறுவர்கள் தங்கள் மீது கோபப்படுவது தான் குற்ற உணர்வாக மாறுகிறது. அவர்கள், தாங்கள் செய்த தவறினால் தான், அந்த நபர் இறந்துவிட்டார் என நினைத்து வேதனைப்படுவார்கள். மேலும் தாங்கள் அறியாமல் செய்த சிறு தவறுகளைக் கூட நினைத்து அதை பெரிதுபடுத்தி, தன்னைத் தானே குத்திக் கொள்வார்கள்.

எப்படி உதவலாம்?
பெரியவர்கள் சிறியவர்களின் குற்ற உணர்வைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் எந்த காரியத்தை செய்ததினால் குற்ற உணர்வு ஏற்பட்டது என கேட்டு, அந்தக் காரியத்தினால், அந்த நபர் இறக்கவில்லை என்பதை விளக்கலாம். இந்த குற்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும் என்பதையும், அதனைப்பற்றி பேச ஊக்குவிப்பதும், சில காலங்களில் அது மறைந்துவிடும் என்பதையும் தெளிவுபடுத்தலாம்.

கட்டம் 6 : மனக்கவலை (Depression)

மனக்கவலை சிறுவர்களுக்கு ஏற்படலாம். இது எப்படி ஏற்படுகிறது? மறுப்பு, கோபம், குற்ற உணர்ச்சி போன்ற கட்டங்களைத் தாண்டியவுடன், அவர்கள் தங்கள் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள். இறந்த நபர் இனிமேல் திரும்பி வரப்போவதில்லை என்ற நிஜத்தை அவர்கள் உணரும்போது தான், மனக்கவலை ஏற்படுகிறது.

இதை எப்படி கண்டுகொள்ளலாம்?
சிறியோருக்குப் பசி ஏற்படாததால், சாப்பிட வைப்பது கடினமான காரியம். அவர்கள் முன்பு போல் துள்ளி குதித்து விளையாட மாட்டார்கள். அவர்கள் பெலனற்று கூட காணப்படலாம். அவர்கள் குழம்பினவர் போல இருக்கலாம். மேலும் அவர்கள் பயந்து, தன்னுடன் கூட இருக்கும் மற்றவர்கள் கூட இறந்து விடுவார்களோ என்று மிகவும் பயப்படலாம்.

எப்படி உதவலாம்?
மனக்கவலை வருவது இயற்கையாகவே நடைபெறும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சிறியோர்களின் மனதையும் அவர்களின் கவலை எண்ணங்களையும் குறித்து பேச வேண்டும். மெதுவாக செல்லுங்கள். பழைய நண்பர்களிடம் பழக விடுங்கள். சில காலங்களில் மனது இயல்பு நிலை அடையும்.

கட்டம் 7 : ஏற்றுக் கொள்ளுதல் (Acceptance)

சில வாரங்களில், அல்லது சில மாதங்களில் சிறுவர்கள், இறந்த நபர் மீண்டும் வரப்போவது இல்லை என்பதை அடிமனதில் உணர்ந்து விடுவார்கள். அந்த நபர் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு அவர்கள் தயார் ஆகிவிட்டார்கள். இப்போது, அந்த சிறுவர் முன்பு போல் ஆகிவிடுவார்கள் என்று கருதிவிடக் கூடாது. வாழ்க்கை முன்பு போல் ஒரு போதும் ஆக முடியாது. ஏனென்றால் அந்த நபர் மீண்டும் வரப்போவதில்லை. ஆனாலும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு ஒளி பிறக்கும். அது அவர்களை மீண்டும் மலரப் / பிரகாசிக்கப் பண்ணும். ஆம். அதுவே அந்த நம்பிக்கையின் ஒளி. அந்த நம்பிக்கை என்ன? வெளி. 20:12ல் இப்படியாக வாசிக்கிறோம் : “மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்”. ஆம், இறந்த நபரை ஒரு நாள் பரலோகத்தில் நாம் கண்டு மகிழுவோம் என்பதே அந்த ஒளியின் நம்பிக்கை.

“அங்கே (பரலோகத்தில்) இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள் மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதா காலங்களிலும் அரசாளுவார்கள் – வெளி 22:5″

smsimonkகுழந்தையினுடைய உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *